தையிட்டியில் என்ன தான் நடக்கிறது?
தையிட்டியில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் விகாரை கட்டப்பட்ட பகுதியில் ‘சட்டவிரோதக் கட்டுமானம்’ என அறிவிப்புப் பலகையினை நாட்டி…
தையிட்டியில் என்ன தான் நடக்கிறது?
தையிட்டியில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் விகாரை கட்டப்பட்ட பகுதியில் ‘சட்டவிரோதக் கட்டுமானம்’ என அறிவிப்புப் பலகையினை நாட்டி சட்டபூர்வக் கடமையினை ஆற்றுவதற்குச் சென்ற வலி.வடக்கு பிரதேச சபையினர் சிறிலங்கா காவல் துறையினால் கடந்த 21, டிசம்பர் 2025 அன்று தடுத்து நிறுத்தப்பட்டு பதற்றமான சூழல் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் உட்செல்ல முடியாது வெளியில் கத்திக் கொண்டிருக்க, சட்டபூர்வக் கடமையினை ஆற்ற முடியாமல் பிரதேச சபையினர் தடுக்கப்பட்டிருக்க, சிங்கள சமூகத்தினரின் வாகனங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து வழமைபோல் உள்நுழைய அனுமதிக்கப்பட்டது..
தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம், சிங்கள் — பௌத்த பெரும்பாண்மை வாத மனோநிலை, ஆளும் சிறிலங்கா அரசுகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் சிந்திப்பதற்கு உரையாடல்களிற்கான வெளிகளையும் ஏற்படுத்தியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம் தொடர்பில் வெவ்வேறு தரப்பினர்களும் தமக்கேற்ற வகையிற் கருத்துரைப்பதும், அதனைச் சூழ பல்வேறு சதிக்கோட்பாடுகள் கட்டியெழுப்பப்படுவதும் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கட்டுரை தையிட்டி விகாரை விடயத்தில் நடந்தவை மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவை தொடர்பில் தனது அவதானிப்பினைச் செலுத்துகின்றது.

இரண்டு வேறுபட்ட காணிகள்
தையிட்டிப் பகுதியில் தேவநம்பிய தீசன் மன்னன் காலத்திலிருந்து விகாரையொன்று இருந்து வந்துள்ளதாக மகாவம்சம் குறிப்பிடுவதாகவும், அதனை பிற்காலங்களில் பௌத்தர்கள் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த விகாரையே மீளவும் அந்த நிலத்தில் நிர்மாணிக்கப்பட்டள்ளதாவும் விகாராதிபதி தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த நிலப்பகுதி விகாரைக்கு உரியது தான் என்பதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் எவையும் இல்லை என்பதோடு, உரிமை கோரல் இதிகாசங்களை அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது.
சர்ச்சைக்குரிய விகாரை அமைக்கப்பட்டள்ள காணிக்குப் புறம்பாக, பௌத்த மத வழிபாட்டிடம் ஒன்று இருந்ததற்கான நிலப்பகுதியொன்றும் இனங்காணப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டளவில் தமிழர் ஒருவர் ‘கலகம ஆராச்சிகே ஆபிரகாம் பெரேரா’ என்ற சிங்களவரிடம் பெற்றுக் கொண்ட கடனுக்குப் பதிலாக வழங்கிய 1.25 ஏக்கர் நிலப்பகுதியே அதுவாகும். பின்னர் அந்த காணியானது 1946ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி குறித்த சிங்கள நபரினால் நயினாதீவு நாகவிகாரைக்கு தானமளிக்கப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் காங்கேசன்துறை சீமேந்துச் தொழிற்சாலைப் பணிகளிற்காக பௌத்த சிங்களவர்கள் வசித்துள்ளனர். அவ்வாறு சீமேந்து தொழிற்சாலையில் பணியாற்றியவரே குறித்த காணிக்கு உரிமையைக் கொண்டிருந்த ஆபிரகாம் பெரேரா என்ற நபராவார். குறித்த நபரால் தானமளிக்கப்பட்டதன் பின்னர் தையிட்டிப் பகுதியில் போதி மரமொன்றினை அடிப்படையாகக் கொண்டு சிறிய ஆச்சிரமமும் விகாரையும் 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.
பிற்காலங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்களினால் அந்தக் காணி மற்றும் விகாரை என்பவற்றைக் கைவிட்டு சிங்களவர்கள் வெளியேற வேண்டிய சூழல் எழுந்ததாகவும், 1970 களினைத் தொடர்ந்து வந்த காலங்களில் அந்த விகாரை சிதைவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விகாரைக் கட்டுமானம்
விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமையப் பெற்றிருக்க, தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் மகாவம்சம் குறிப்பிடுவதாகக் கூறி விகாரைக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரணில் — மைத்திரி நல்லாட்சிக் கால அரசில் வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பு வகித்த ரெஜினோட் குரேயினால் பழைய திஸ்ஸ விகாரை இருந்ததாக நம்பப்படும், தற்போது விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
விகாரைக்குச் சொந்தமான 1.25 ஏக்கர் காணி பிறிதொரு இடத்தில் இருக்க, மக்களுக்குச் சொந்தமான 7 ஏக்கர் காணியில் 2021ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் எதிர்ப்பினையும் மீறி இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் 100 அடி உயர தூபி கட்டப்பட்டது. பின்னர் வேறு பகுதிகளில் விகாரையுடன் தொடர்புடைய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஈழப்போர் காலகட்டத்தில், குறித்த பகுதி மக்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினால் அவை கைப்பற்றப்பட்டன. பலாலி இராணுவ முகாமையொட்டிய குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதக் கட்டுமானம்
தற்போது சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ள காணிகளிற்குரிய சட்டபூர்வ காணி உரிமைப் பத்திரங்களினை காணி உரிமையாளர்கள் கொண்டிருக்கின்றனர். குறித்த காணி உரிமைப் பத்திரங்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டள்ளதோடு, அவற்றில் 1928 ஆம் ஆண்டைச் சேர்ந்த பத்திரங்களும் உள்ளடங்கின்றமை அவதானிக்கத்தக்கது.
1946 ஆம் ஆண்டு சிங்கள நபரினால் நயினாதீவு நாகவிகாரைக்கு தானமளிக்கப்பட்ட 1.25 ஏக்கர் காணிக்குரிய காப்பாளரான நாகவிகாரை விகாராதிபதி மக்களின் காணியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு தனது கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் குறித்த விகாரை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு, ‘பிறிதொரு இடத்தில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள தற்போதைய சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரை அனுமதியற்ற கட்டுமானம் ஆகும். மக்களிடம் பத்திரங்கள் உள்ளமையினை அறிந்தும், சில இராணுவ அதிகாரிகளினால் கட்டப்பட்டுள்ளது.’
கட்டுமானமொன்றினை மேற்கொள்ளும் போது அந்தப் பிரதேசத்தை ஆளுகை செய்யும் உள்ளூராட்சி மன்றத்திடம் சட்டபூர்வ ஒப்புதல்களினை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறான சட்டபூர்வ தேவைப்பாடுகள் எவையும் தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தையிட்டி திஸ்ஸ விகாரையை ‘சட்டவிரோதக் கட்டிடம்’ என்று பிரகடனப்படுத்தி மும்மொழிகளிலும் அறிவித்தல் பலகையை நாட்டுவதற்கான தீர்மானம் கடந்த 18.12.2025 அன்று வலி. வடக்கு பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற பிரதேச சபை அமர்வில், உறுப்பினர் ப.சாருஜன் அவர்களினால் முன்மொழியப்பட்ட தீர்மானம் தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
வலி. வடக்கு பிரதேச சபை அமர்வில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ‘சட்டவிரோதக் கட்டிடம்’ என்று பிரகடனப்படுத்திய அறிவித்தற் பலகையை நாட்டி தமது சட்டபூர்வக் கடமையினை ஆற்றுவதற்குச் சென்ற பிரதேச சபையினர் கடந்த 21.12.2025 அன்று சிறிலங்கா காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதேச சபையினரின் தமது சட்டபூர்வக் கடமைக்கு இடையூறு விளைவித்த காவல்துறையினர் மீது இதுவரையில் எவ்வித எவ்வித நடவடிக்கைகளும் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

விகாராதிபதிக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு
இலங்கையின் பௌத்த வம்சங்களில் ஒன்றாக அறியப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக்குழுவின் வட இலங்கை தலைமைச் சங்கநாயக்கராக தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தராம தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பௌத்தக் கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி ஆகியோரின் இணைத் தலைமையில் கடந்த 21.12.2025 அன்று நடைபெற்றது.
வலி.வடக்கு பிரதேச சபையின் 18.12.2025 அன்று நடைபெற்ற அமர்வில் சட்டவிரோத விகாரையின் விகாராதிபதியிடம் அதிகாரங்களைக் குவிப்பதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு, சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வலி. வடக்கு பிரதேச சபையின் அழைப்பில் 21.12.2025 அன்று விகாரை முன்பாக கண்டனப் போராட்டம் நடைபெற்றது. கண்டனப் போராட்டத்திற்கு யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேச சபைகளும் தங்களின் ஆதரவுகளினை வழங்கியிருந்தன. அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது வலி. கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தி.நிரோஷ், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பா.சாருஜன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டள்ளனர்.
தொடரும் அறப்போராட்டங்கள்
மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரையினை அகற்றுதலும், தமக்கு உரிமையுள்ள நிலங்களை விடுவித்தலும் முதன்மைக் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. நிலத்தின் உரிமையாளர்கள், அப்பகுதி வாழ் மக்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், குடிமக்கள் சமூக அமைப்பினர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களினால் ஒவ்வொரு போயா தினங்கள் மற்றும் முக்கிய தினங்களில் அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டங்களைத் தடுப்பதற்கு சிறிலங்கா காவல் துறையினர் அவ்வப்போது நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் கைதுகள் பதற்றமான சூழல்கள் தோன்றுகின்ற போதிலும் ஒவ்வொரு போயா நாளிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் அமைதியான முறையில் கறுப்புக் கொடி மற்றும் மஞ்சள்-சிவப்புக் கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகின்றனர்.

சிறிலங்கா அரசின் நிலைப்பாடு
சிறிலங்காவின் அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்க தனது யாழ்ப்பாணத்திற்கான பயனங்களின் பொது ‘மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக 31.01.2025 அன்று நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், 26.04.2025 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம், 01.09.2025 அன்று யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள பிராந்திய பணிமனைத் திறப்பு வைபவம் எனப் பல சந்தர்ப்பங்களில் கூறி வருகின்றமை நோக்கத்தக்கது.
தற்போதைய என்.பி.பி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளைக் கடந்துள்ளது. எனினும் தமது தேர்தல் அறிக்கைகள் மற்றும் மேடைகளில் ‘சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வோம்’ என்ற வாக்குறுதியை தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தில் நடைமுறைப்படுத்துவதிலோ, அநுரகுமார திசாநாயக்க மேடைகளில் அவ்வப்போது முழங்கும் ‘மக்களின் நிலங்களை மக்களிற்கே வழங்குவோம்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதிலோ தொடர்ந்தும் பின்னடித்தும் திட்டமிட்டே காலந்தாழ்த்தி வருகின்றமையும் தொடந்து நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்களும் புலப்படுத்தி வருகின்றன.
சுமூகமான தீர்வை எட்டுவதற்கு சிறிலங்காவின் புத்தசாசன அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது ‘விகாரையை முழுமையாக அகற்றாமல், அதனைச் சூழவுள்ள மேலதிக காணிகளை விடுவிப்பதென்றும் விகாரையை இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து பௌத்த விவகாரத் திணைக்களத்தின் கீழ்க் கொண்டு வருவதென்றும் முன்மொழியப்பட்டது. நிலத்தின் சட்டபூர்வ உரிமையாளர்கள் ‘தமது பூர்வ நிலம் முழுமையாக மீள ஒப்படைக்கப்பட வேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்ததாலும், விகாரையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையினாலும் உடன்பாடு எவையும் எட்டப்படவில்லை.
ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்குப் பதிலாக தமிழ் மக்களிற்கு நட்டஈடு அல்லது மாற்று நிலம் வழங்கவோ திட்டமிடப்பட்டுள்ளதாக என்று தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும், மீன்பிடித் துறை அமைச்சருமான இ.சந்திரசேகரனினால் 12.06.2025 அன்று நடைபெற்ற வலி. வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்திற்கு விரோதமாக நடைபெற்ற ஆக்கிரமிப்பினை முறைப்படுத்தி சட்டபூர்வமாக்குவதற்கான செயல்களில் ஈடுபடுகின்றமையினை சமீபகால நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன. இடம்பெயர்ந்த மற்றும் அபகரிக்கப்பட்ட நிலங்களைக் கொண்ட தமிழர்களிடையே, எதிர்காலங்களில் இதனைப் போல் உரிய தீர்வு அல்லது நீதி இல்லாமல் சிக்கல்கள் தீர்க்கப்படலாம் என்ற அச்சத்தினை எழுப்பியுள்ளது.
메타데이터
- post_id
- 062db66fa53c
- slug
- தையிட்டியில்-என்ன-தான்-நடக்கிறது-062db66fa53c
- url
- https://medium.com/@sivakajan/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-062db66fa53c
- canonical_url
- https://medium.com/@sivakajan/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-062db66fa53c
- author_url
- https://medium.com/@sivakajan
- status
- ok
- fetched_at
- 2026-07-13 14:59:43