← Back to list

வருத்தம் தந்த விருத்தம்

கயிறு ஒன்றை இரண்டு துண்டுகளாக்க ஒரே வெட்டாக வெட்டி விடலாம். அதுவே ஒரு இடத்தில் தொடர்ந்து உராய்ந்து பிரிபிரியாகப் போய் இரு துண்டுகளாவதை…

elavasam · 2017-10-11 12:45 · 3 claps · 0.8 min read
#தமிழ் #music #tm-krishna #perumal-murugan #viruttam
Open on Medium ↗
Wiki topics: CUL · Culture & Media 🎵 · Music & Audio

வருத்தம் தந்த விருத்தம்

கயிறு ஒன்றை இரண்டு துண்டுகளாக்க ஒரே வெட்டாக வெட்டி விடலாம். அதுவே ஒரு இடத்தில் தொடர்ந்து உராய்ந்து பிரிபிரியாகப் போய் இரு துண்டுகளாவதை நைந்து போவது என்போம். நைவு என்பது ஒரேடியாக இல்லாமல் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒரு துன்பமான செயல். ஔவையார் இதை ஆத்திச்சூடியில் நைவினை நணுகேல் என்பார். கெட்ட செயலைச் செய்யாதே எனச் சொல்லாமல் ஐயோ இப்படி நடந்து விட்டதே என எண்ணி எண்ணி வருந்தக் கூடிய செயலைச் செய்யாதே என்பது அதன் பொருள்.

உடல்ரீதியாகப் பார்த்தோமானால் மரணத்தையும் விடக் கொடுமையானது சித்திரவதை. அதையும் விடக் கொடுமையானது மனரீதியான சித்திரவதை. ஒன்றும் நடக்காதது போல் இருந்து கொண்டிருந்தாலும் மனத்தில் கரையான் அரிப்பதைப் போல இருந்து கொண்டே இருக்கும் வலியை சமாளிக்க வேண்டும். அப்படி முடியாத துயரில் மூழ்கிக் கிடந்த பொழுதில், ஐயோ இப்படி நான் நைந்து போய் கிடக்கிறேனே, எனக்கு விடிவே இல்லையா? என் துயரைப் போக்க வரமாட்டாயா? என்று அரற்றுகிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். அந்த வேதனையை இப்படி ஒரு விருத்தமாக வடித்தெடுத்திருக்கிறார்.

நைகின்றேன் நைகின்றேன் நாளெல் லாம்

நைந்து நைந்து அழுகின்றேன் ஐயோ

வேகின்ற உள்ளத்தின் வேதனை தீர்த்திட

விரைந்து வந்திட மாட்டாயோ மாட்டாயோ

போகின்ற போக்கில் பொய்ஜாலம் காட்டும்

புல்லரைப் புரட்டரைப் பாதுகாப்பாயோ

ஆகின்றதெல்லாம் அழிய விடலாமோ

அருளான பொருளான மாதொரு பாகனே!

பொதுவாக ஒரு முறை சொல்லிவிட்டு நிறுத்தி விடுவதை துன்பம் வந்து அழும் பொழுது திரும்பத் திரும்பச் சொல்லி அழுவது இயல்பு. அதன்படியே நைகிறேன் நைகிறேன், நைந்து நைந்து அழுகிறேன், மாட்டாயோ மாட்டாயோ என்று சொல்லும் பொழுது அவரின் துன்பம் படிக்கும் நமக்கும் வந்துவிடுகிறது. அதை டிஎம்கிருஷ்ணா பாடிக் கேட்கும் பொழுது அதன் தாக்கம் இன்னும் பெரிதாக இருக்கிறது. இப்படி வந்து என் வேதனையைத் தீர்த்திட மாட்டாயோ என்று ஒரு விருத்தத்தைப் பாடி அதனைத் தொடர்ந்து இரக்கம் வராமல் போனதென்ன காரணம் எனப் பாடியது சாலப் பொருத்தம்.

[embed]


메타데이터
post_id
213199c8c559
slug
வருத்தம்-தந்த-விருத்தம்-213199c8c559
url
https://medium.com/@elavasam/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-213199c8c559
canonical_url
https://medium.com/@elavasam/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-213199c8c559
author_url
https://medium.com/@elavasam
status
ok
fetched_at
2026-07-30 09:34:49