“இந்துக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்,அவர்கள் மனதில் இடதுசாரி சிந்தனைகள் தோன்ற வேண்டும்”
- நவ்யா ஃபெல்சின். ஆ
“இந்துக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும்,அவர்கள் மனதில் இடதுசாரி சிந்தனைகள் தோன்ற வேண்டும்”
- நவ்யா ஃபெல்சின். ஆ
தமிழ்ப் புலிகள் கட்சியின் ஒரு இளம் புலியான மு.திருவளவன் தன்னுடைய இளம் வயதிலேயே சமூக சீர்திருத்தங்களை முன்னெடுக்கின்ற களப்போராளியாக திகழ்கிறார்.அது மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் முன்னுதாரணமாகவும், இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும் இருக்கிறார்.ஆணவ படுகொலைகள், அருந்ததியினர் இட ஒதுக்கீது போன்றவற்றை பற்றி அவர் எளிமையான முறையில் பதில் அளித்தார்.

சூன் 16 2024 மாவீரன் சேகுவாரா பிறந்தநாள் அன்று கரூரில் தமிழ்ப் புலிகள் கட்சி தலைமையில் நடந்த கருத்தரங்கில் மு. திருவளவன் உரையாற்றிய போது.
தமிழ்ப் புலிகள் கட்சியின் உருவாக்கம் -
“ஈழத் தமிழர்கள் விவகாரம் உச்சத்தில் இருந்த காலகட்டம். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த நேரமும் அது. எனவே, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை குரலாகவும், சாதிய வன்கொடுமைகளை ஒழிக்கவும்,மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2009 ஆம் ஆண்டு நவம்பர் 26 மேதகு பிரபாகரன் அவர்களது பிறந்தநாள் அன்று தலைவர் திரு.நாகை திருவள்ளுவன் அவர்களால் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு பிறகு ஒரு கட்சியாக மாறியது தான் தமிழ்ப் புலிகள் கட்சி” என்று திருவளவன் கூறினார்.
சமுதாயத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் செயல்பாடு -
“1990’களில் தொடங்கி தற்போது வரை ஒடுக்கப்பட்டு கிடைக்கின்ற சமூகமாகத்தான் அருந்ததியர் சமூகம் இருக்கிறது.குறிப்பாக இன்றளவும் பல கிராமங்களில் அருந்ததியர் சமூக மக்களால் செருப்பு போட இயலவில்லை, அவர்களுக்கென்று குடித்தண்ணி இல்லை, அவர்கள் நடப்பதற்கு பாதை இல்லை” என அருந்ததியர் சமூகம் எதிர்கொள்கின்ற பல பிரச்சனைகளை திருவளவன் நம் கண் முன் கொண்டு வந்தார்.
“ நாடே வளர்ந்து வருகின்ற இந்த சூழலில் கூட அருந்ததியர் சமூகம் அரசியலில் அணியாக திரளவில்லை.அது மட்டுமல்லாமல் அரசியல் விழிப்புணர்வின் தேவை இருக்கக் கூடிய ஒரு சமூகமாகத்தான் இருக்கிறது” என்று மேலும் கூறினார்.
“தமிழ்ப் புலிகள் கட்சி அருந்ததியின மக்களுக்கான ஒன்றாக இருந்தாலும், அருந்ததியினர் தாண்டி தமிழ்நாட்டின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குரல் கொடுத்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய 76 பட்டியலின சாதியை சேர்ந்த மக்களுக்காக தமிழ்ப் புலிகள் கட்சி உரிமை குரல், ஆதரவு குரல் எழுப்பியுள்ளது,இனிமேலும் எழுப்பும்.
குறிப்பாக காட்டுநாயக்கர் சமூகம் வரலாற்றை எல்லாம் புரட்டி பார்த்தால் மிகக் கொடுமையாக இருக்கும்.இன்று வரை ஒரு சாதி சான்றிதழ் கூட அந்த சமூகத்திற்கு வழங்கப்படவில்லை. கடந்த 14 நவம்பர் 2024 அன்று கூட மதுரையில் இருக்கக்கூடிய சமயநல்லூரில் காட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நானும், தலைவரும் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பாக கலந்து கொண்டு உரையாற்றினோம்.
மேலும் தமிழ்நாட்டின் பிரச்சினைகளான மீத்தேன், ஜல்லிக்கட்டு,காவிரி மேலாண்மை,ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவற்றிற்கும் தமிழ்ப் புலிகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, ஒடுக்கப்படக்கூடிய எந்த சமூகமாக இருந்தாலும் பெரியாரின் பிள்ளைகளாக, அம்பேத்கரின் பிள்ளைகளாக களத்தில் இறங்கி நாங்கள் போராடுவோம்”என்று தமிழ்ப் புலிகள் கட்சியின் செயல்பாடு குறித்து பகிர்ந்து கொண்டார்.
அருந்ததியினருக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீடு -
“ 90களில் இருந்தே இந்த 3% உள் இட ஒதுக்கீடுக்காக அருந்ததியினர் சமூகம் போராடி வருகிறது. இதற்காக பல்வேறு அருந்ததியினர் இயக்கங்கள் எண்ணற்ற முன்னெடுப்புகளை எடுத்தாலும்,1990’களில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவராக இருந்த திரு என். வரதராஜன் அவர்கள் சென்னை கோட்டையை நோக்கி ஒரு பேரணியை நடத்தினார். இந்தப் பேரணி இட ஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பங்களித்துள்ளது. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சி தான் முதன் முதலில் இந்த இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அரசாங்கத்திற்கு எடுத்துச் சென்றது. 90களில் தொடங்கி 2022 வரை பல அருந்ததியர் இயக்கங்கள் இந்த இட ஒதுக்கீட்டுக்காக போராடியது .அந்த வகையில் தமிழ்ப் புலிகள் கட்சி டெல்லியில் சுமார் 150–200 பேர் கொண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. மதுரையில் மறியல் போராட்டம் நடத்தியது. மேலும், இந்த 3% உள் இட ஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என்ன? இந்த இட ஒதுக்கீடு நமக்கு ஏன் தேவை? இதனால் நம் சமூகம் எப்படி வளர்ச்சி அடையும்? என்பதனை இந்த எளிய மக்களுக்கு எளிய முறையில் புரிய வைக்க பல்வேறு கருத்தரங்குகள்,பொதுக்கூட்டங்கள் ,துண்டு பிரச்சாரங்கள் போன்றவற்றை நடத்தியுள்ளது. இதன் வெளிபாடு மற்றும் வெற்றி தான் கடந்த ஆகஸ்ட் 1 2024 அன்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாட்டில் இருகக்கூடிய அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ள இட ஒதுக்கீடு வழங்கும் 2009ம் ஆண்டு சட்டதுக்கு அங்கீகாரம் வழங்கியது. “ என்று மூன்று சதவீத உள் இட ஒதுக்கீட்டில் தமிழ்ப் புலிகள் கட்சியின் பங்கு பற்றி கூறினார்.
தென் மாவட்டங்களில் மட்டும் தான் ஆணவ படுகொலைகள் நடக்கிறதா?
“அனைத்து மாவட்டங்களிலும் ஆணவ படுகொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தென்மாவட்டங்களில் சற்று அதிகமாக நடக்கிறது. அது மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் நடக்கக்கூடிய ஆணவ படுகொலைகள் வெளியே வருவதற்கான காரணம் ஊடகங்கள் தான். குறிப்பாக அருந்ததியர் சமூகம் அதிகளவில் இருக்கக்கூடிய மேற்கு மாவட்டங்களான கோவை,சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் தந்திரமாகவும், மறைமுகமாகவும், ரகசியமாகவும் ஆணவ படுகொலைகள் நடக்கிறது. உதாரணமாக பரியேறும் பெருமாள் படத்தில் எப்படி அந்தப் பெண்ணை அடித்து தூக்கில் ஏற்றிவிட்டு அது தற்கொலை என்ற ஒரு பின்பத்தை உருவாக்குவார்களோ அதே போல் தான் மேற்கு மாவட்டங்களிலும் நிகழ்கிறது. மேலும் ஒரு உதாரணமாக ஏதேனும் ஒரு மேற்கு மாவட்டத்தில் ஒரு பெண் கிணற்றில் இறந்து கிடக்கிறார் என்றால் அது ஒரு தற்கொலையாகத்தான் பார்க்க படுகிறது, தற்கொலை என்ற பின்பமானது கட்டமைக்கப்படுகிறது. ஆனால்,அந்த விவகாரத்தை ஆழமாக பார்த்தால் தெரியும் அது ஒரு ஆணவ படுகொலை என்று. அந்த ஆணவ படுகொலையை தற்கொலையாக உருமாற்ற தற்கொலை என்ற ஒரு பின்பத்தை உருவாக்க இங்கு பல சாதி சங்கங்கள் ஆதரவாக இருக்கின்றது”என்றார்.
“சமீபத்தில் கூட நாமக்கல்லில் திருச்செங்கோடு அருகில் கோகுல்ராஜ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அது தற்கொலையாக உருமாற்றம் செய்யப்பட்டது. அவ்வப்போது அரசியல் கோமாளியான சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது கூட இது படுகொலை இல்லை மாறாக தற்கொலை என்று கூறினார். வார்த்தைக்கு வார்த்தை நான் தமிழன்…. தமிழன்… முப்பாட்டன் முருகன்…. என கூறுகின்ற சீமான் அவர்கள் ஒரு தமிழனாக இருந்தால் அந்த படுகொலையை ஆணவ படுகொலை என்றுதான் கூறியிருக்க வேண்டும் மாறாக தற்கொலை என்று கூறி இருக்கிறார். இவ்வாறாக அரசியலில் இருக்கக்கூடிய இவர் போன்ற அரசியல் கோமாளிகளும் சரி, பல்வேறு சாதி சங்கங்களும் சரி இது போன்ற ஆணவ படுகொலைகளுக்கு ஆதரவாக இருக்கின்றன” என்று கூறினார்.
“ மற்ற மாநிலங்களுடன் அதாவது ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பிடும்போது தமிழ்நாடு பல முற்போக்கு கருத்துக்கள் உடைய ஒரு மாநிலமாகத்தான் திகழ்கிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கான காரணம் என்னவென்றால் தலித் அல்லாதோர் என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கியதுதான். அதாவது மற்ற சாதியை சேர்ந்த மக்கள் மனதில் தலித் தான் உனக்கு எதிரி என்ற கருத்தை விதைத்தது தான் காரணம். முற்போக்கு சிந்தனையோடு பார்த்தால் நமக்கு எதிரியாக இருப்பது பார்ப்பனர்கள் தான். ஆனால்,இங்கு இருக்கக்கூடிய சாதி சங்கங்கள் அதை திசை திருப்பி இருக்கிறது.
இந்துக்கள் மனதில் எப்போது மாற்றம் நிகழ்கிறதோ, இடது சாரி சிந்தனைகள் தோன்றுகிறதோ, அப்போதுதான் இந்த ஆணவ படுகொலைகள் குறையும். இதற்காகத்தான் தமிழ்ப் புலிகள் கட்சி போன்ற பல ஜனநாயக கட்சிகள் தங்களுடைய பணிகளை செய்து வருகின்றன” என்று அவர் ஆணவ படுகொலைகள் பற்றி கூறினார்.
சமீபத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.நாகை திருவள்ளுவன் கைது -
“அருந்ததியினர் சமூகத்திற்கு என்று பல இயக்கங்கள் இருக்கின்றது.அதில் ஒரு முன்னோடி இயக்கமாகத்தான் தமிழ்ப் புலிகள் கட்சியும் இருக்கின்றது. தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவராக இருக்கக் கூடிய திரு.நாகை திருவள்ளுவன் அவர்கள் சமரசமற்ற தலைவராகவும், நுணுக்கமான ஒரு தலைவராகவும்,பூர்விக்குடிகளுக்கான தலைவராகவும் இருக்கிறார்.
ஒரு படையை வீழ்த்த அந்த படை தலைவனை எப்படி வீழ்த்த முயல்வார்களோ, அதேப்போல், அருந்ததியர் சமூகத்தை வீழ்த்த இங்கு இருகக்கூடிய சாதி சங்கங்கள், அரசாங்கம், காவல்துறை போன்றவை தொடர்ந்து முயற்சி செய்கின்றன.இதன் வெளிப்பாடுதான் கடந்த டிசம்பர் 2ம் தேதி 2024 அன்று தலைவர் அவர்கள் கைது செய்யப்பட்டது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். பலியான நபர்களுக்கு அமைதியான முறையில் நினைவு நாள் அன்று வீர வணக்கம் செலுத்த வருகை தர இருந்த தலைவர் அவர்களை இரவோடு இரவாக கோவையில் வைத்து காவல்துறை கைது செய்தது. தலைவர் அவர்களின் கைதை கண்டித்து பல்வேறு இடங்களில் தமிழ்ப் புலிகள் களத்தில் இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் என் தலைமையில் கூட பழனி பஸ் நிலையம் அருகே தலைவர் அவருடைய கைதை கண்டித்து சாலை மறியல் நிகழ்ந்தது” என்றார்.
“எனவே, இன்றளவும் தலித் பகுதிகளில் மின் விளக்கு வசதியில்லை, சாலை வசதியில்லை, குடித்தண்ணி இல்லை, என் தாய்மார்களுக்கு ஒதுங்குவதற்கு கழிவறை இல்லை இவ்வாறாக பல பிரச்சனைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கிறது. இங்கு இருக்ககூடிய சாதி சங்கங்கள் அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை பேசக்கூடிய பல கட்சித் தலைவர்களை ஆணவ படுகொலை செய்து வருகிறது. இருப்பினும் அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் கொள்கைகளை நிலைநாட்ட தொடர்ந்து தமிழ்ப் புலிகள் கட்சி களத்தில் இறங்கி ஊமையாக இருக்ககூடிய மக்களுக்காக போராடும். எந்த சமூகத்தை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த சமூகமெல்லாம் ஒரு நாள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்” என்று திருவளவன் கூறினார்.

சூன் 16 2024 மாவீரன் சேகுவாரா பிறந்தநாள் அன்று கரூரில் நடந்த கருத்தரங்கில் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் திரு நாகை. திருவள்ளுவன் அவர்களுக்கு மு. திருவளவன் பொன்னாடை போற்றிய போது.
메타데이터
- post_id
- 6c89549987cd
- slug
- இந்துக்கள்-மனதில்-மாற்றம்-வரவேண்டும்-அவர்கள்-மனதில்-இடதுசாரி-சிந்தனைகள்-தோன்ற-வேண்டும்-6c89549987cd
- url
- https://medium.com/@23udj007/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-6c89549987cd
- canonical_url
- https://medium.com/@23udj007/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-6c89549987cd
- author_url
- https://medium.com/@23udj007
- status
- ok
- fetched_at
- 2026-06-26 03:39:16